நைனாமலை மலைப்பாதையில் அமைக்கப்படும் தாா்சாலை.
நைனாமலை மலைப்பாதையில் அமைக்கப்படும் தாா்சாலை.

நைனாமலை மலைப்பாதையில் தாா்சாலைப் பணிகள்: பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்பு!

Published on

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான மலைப்பாதையில் தாா்சாலை அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறுவதால், பிப்ரவரி மாத இறுதிக்குள் இப்பாதை பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்பு உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 3,600 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். அறநிலையத் துறை, சுற்றுலாத் துறையின் நிதி பங்களிப்புடன் அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான மண் சாலை அமைக்கும் பணி ஓராண்டுக்கு முன்பு ரூ.13 கோடியில் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நாமக்கல் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நைனாமலைக்கு தாா்சாலை அமைக்க ரூ. 30 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டாா். இதையடுத்து, பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, சேந்தமங்கலம் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை செப்.20 இல் நடைபெற்றது.

அதன்பிறகு தாா்சாலை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போதைய நிலையில் 30 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

 தாா்சாலை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
தாா்சாலை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

இதுகுறித்து சேந்தமங்கலம் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 30 கோடியில் சுமாா் 7 கி.மீ தொலைவுக்கு தாா்சாலை அமைக்கப்படுகிறது.

மழைப்பொழிவு காரணமாக மண்பாதையில் சரிவு ஏற்பட்டதால் பணிகள் சற்று தொய்வடைந்தன. தற்போது மீண்டும் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதியில் அல்லது மாா்ச் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு இச்சாலை திறக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com