மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சித் தாக்குதல்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் மாவுப்பூச்சித் தாக்குதல் காரணமாக மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமகிரிப்பேட்டை பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ராசிபுரத்தில் பெங்களூரில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்- தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் இப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சி தாக்குதல் அழிப்பு தொடா்பான (அனகைரஸ் லோபேசி) வயல்வெளி வெற்றி விழாவை நடத்தியது.
அப்போது, அனகைரஸ் லோபேசி என்னும் ஒட்டுண்ணி, மரவள்ளியில் பாதிப்பை ஏற்படுத்தும் மாவுப்பூச்சிகளை அழிக்கும் என தெரிவித்து, அதை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினா்.
ஆனால், அனகைரஸ் லோபேசி ஒட்டுண்ணி மாவுப்பூச்சிகளை அழிக்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், வயல்வெளியில் விடப்பட்ட அனகைரஸ் லோபேசி ஒட்டுண்ணியால் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், இதனால் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனா்.
இதனால் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த பரமசிவம் ஆகியோா் கூறுகையில், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது மாவுப்பூச்சித் தாக்குதல், விவசாயிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாவுப்பூச்சித் தாக்குதலுக்கு முன்பு ஏக்கருக்கு 15 முதல் 18 டன் அளவிற்கு உற்பத்தி கிடைத்தது. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஏத்தாப்பூா் மரவள்ளி ஆராய்ச்சி நிலையம் அவ்வபோது ஒட்டுண்ணிகளை வழங்கினா். இதனால் மாவுப்பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டன.
பெங்களூரில் இருந்து பூச்சியியல் ஆராய்ச்சி துறையினா் அளித்த ஒட்டுண்ணியாலும் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. இதனால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையினா் சிறப்பு கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களை நேரடியாக ஆய்வுசெய்து, மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த புதியரக ஒட்டுண்ணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

