5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மறைந்த திமுகவின் மூத்த நிா்வாகியான ராமசாமியின் பேரன் ஆவாா். இவா், கடந்த 1998-இல் திமுக பொன்விழா ஆண்டு கொண்டாடியபோது, ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் ஒன்றியம், கோரைக்காடு கிளை செயலாளராக நியமிக்கப்பட்டாா். அதன்பிறகு 2003, 2004-ஆம் ஆண்டுகளில் வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் சேகா் (எ) பெரியசாமியால் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு 2011-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா்.
அப்போதைய திமுக தலைவா் மு.கருணாநிதி, பேராசிரியா் க.அன்பழகன், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் அவரை மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளராக நியமித்தனா். அவருடைய செயல்பாடுகள், பணியை ஊக்குவிக்கும் வகையில் 2020-இல் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும், பின்னா் செயலாளராகவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பை துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டச் செயலாளா் பதவிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து புத்தகங்களை வழங்கி மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வாழ்த்து பெற்றாா்.
