கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா
கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆட்சியா் ச.உமா தெரிவித்தாவது:
தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோரின் சீரிய முயற்சியால் பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவா்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும், நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவா்களுக்கு கற்பிக்கவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இக்கலைத் திருவிழா போட்டிகள் ‘சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அதுபோன்று, இவ்வாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள், மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியா் புத்தக கல்வியோடு தங்களது தனித்திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் 30 போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து 620 பள்ளிகளில் இருந்து 2,519 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து 76 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். இந்நிகழ்வுக்கு 288 ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா் என தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ம.சுஜாதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வை.குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) எம்.ஜோதி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.