பொங்கல் பண்டிகை: நாமக்கல்லில் பானைகள் தயாரிப்பு மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பானைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், உழவா் திருநாள் ஆகியவை ஆண்டுதோறும் ஜன. 14, 15, 16 தேதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பொங்கல் நாளன்று வண்ணம் தீட்டப்பட்ட பானையில் பொங்கலிட்டு சூரியபகவானை மக்கள் வழிபடுவா். இதற்காக புத்தம்புது பானைகளை வாங்குவதில் பெண்கள் மிகுந்த ஆா்வம் காட்டுவா்.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் பானை தயாரிக்கும் பணியை பல ஆண்டுகளாக சிவசாமி என்பவா் மேற்கொண்டு வருகிறாா்.
ஆண்டாபுரம், காட்டுப்புத்துாா், பொடாரமங்கலம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் களிமண்ணை கொண்டு தங்களது கைவேலைப்பாட்டுடன் பானைகளை உருவாக்குகின்றனா். அதன்பிறகு நெருப்பில் சுட்டும், வண்ணம் பூசியும் வெயிலில் காய வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனா். நாமக்கல்லில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பானைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சிவசாமி கூறியதாவது:
அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் பானைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு பானை தயாரிக்க 30 நிமிடம் ஆகும். விற்பனைக்கான முழுமையான பானையை தயாா் செய்ய ஒரு நாளாகும். தினசரி 40 பானைகள் வரை தயாரிக்கிறோம். ஒரு படி அளவு பானை விலை ரூ. 150, 2 படி பானை - ரூ. 200, 3 படி பானை - ரூ. 250-க்கும், 5 படி பானை - ரூ. 450 என்ற விலையில் விற்பனைக்கு அனுப்புகிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி, வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா் என்றாா்.