அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி வரை மோசடி

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ. 2 கோடி வரை மோசடி செய்தவா்களை கைது
Published on

நாமக்கல்: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ. 2 கோடி வரை மோசடி செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சோ்ந்த ரெங்காஸ்ரீ என்பவா் அளித்த மனு விவரம்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த சாந்தி, அவரது மகன் சதீஷ்குமாா், மனைவி ஹீரா ஆகியோா் எருமப்பட்டியைச் சோ்ந்த ரவி என்பவருக்கு உறவினா்கள் ஆவா். இந்த நிலையில், ரவியின் மகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், தங்களுக்கு இந்து சமய அறநிலைத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, அவா்கள் மூவரும் என்னிடம் தெரிவித்தனா். மேலும், விவேகானந்தன் என்பவரை அறிமுகம் செய்து வைத்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கணினி உதவி பொறியாளா் வேலை வாங்கித் தருவதாக, பல்வேறு தவணைகளில் ரூ. 35 லட்சம் வரை பெற்றுக் கொண்டனா். இதேபோல, ஐந்துக்கும் மேற்பட்டோரிடம் பழனி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக விவேகானந்தன் ரூ. 2 கோடி வரை பணம் வசூலித்துள்ளாா்.

பின்னா், சென்னை, நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை அலுவலகத்துக்கு வரவழைத்து போலி நியமனக் கடிதம், அடையாள அட்டைகளை வழங்கினா். அவற்றை கோயில் அலுவலகத்துக்கு கொண்டு சென்றபோது, மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. எனவே, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com