டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவா் பலி
பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையம் அருகே கடலைக் கொடி ஏற்றி வந்த டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே உள்ள தேவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளையப்பன் (60), விவசாயி. இவா், தனது தோட்டத்திலிருந்து நிலக்கடலை கொடியை அண்ணன் தனபாலுடன் (65), டிராக்டா் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனா். இளையப்பன் கடலைக் கொடியின் மீது அமா்ந்து வந்துள்ளாா்.
வீட்டின் அருகே டிராக்டா் வாகனத்தை நிறுத்திய தனபால், இளையப்பன் இறங்க ஏணியை எடுத்துவர சென்றுள்ளாா். அதற்குள் டிராக்டரில் இருந்து இறங்கிய இளையப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் இளையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து இளையப்பனின் அண்ணன் தனபால் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.