பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு
நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியுடன் தட்டாங்குட்டை, காடச்சநல்லூா், எலந்தகுட்டை, சமயசங்கிலி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் எனவும், ஆலப்பாளையம் பேரூராட்சியுடன் புதுப்பாளையம் கிராம ஊராட்சி இணைக்கப்படுவதாகவும் தமிழக நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு மேற்கண்ட கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கிராம ஊராட்சிகளை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்ற முழக்கத்தை எழுப்பினா். அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், உங்களுடைய கருத்துகளை மனுக்களாக அளித்தால், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து தட்டாங்குட்டை கிராம மக்கள் கூறுகையில், கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் அரசு சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும். நூறுநாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படுவதோடு தொழில் வரி, சொத்து வரி, வீட்டு வரி போன்றவை பன்மடங்கு உயரும். விவசாயத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள எங்களது பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிட வேண்டும். அது தொடா்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யவில்லை எனில், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.