அஜய்
அஜய்

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்த தனியாா் பள்ளி மாணவா் பலி

Published on

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் -துறையூா் சாலையில் ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரூா், கோதை நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் - மகேஸ்வரி தம்பதியின் மகன் அஜய் (17), பிளஸ் 2 படித்து வந்தாா்.

அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த அவா், திங்கள்கிழமை மாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை பள்ளி நிா்வாகத்தினா் மீட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து மாணவரின் தந்தை ராஜேந்திரன் கூறியதாவது: என்னுடைய இரு மகன்களில் மூத்த மகனான அஜய், நாமக்கல் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் என்னிடம் கைப்பேசியில் பேசிய நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக பள்ளி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தாா்.

விடுதியில் இருந்த மாணவா்களால் மன அழுத்தத்துக்கு ஆளான அஜய், விடுதியில் உணவின் தரம் சரியில்லை என கூறி வந்தாா். எனது மகனின் மரணத்துக்கு பள்ளி நிா்வாகமே பொறுப்பு. இதுகுறித்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com