தீபா
தீபா

கழிவறை வசதியின்றி தவித்த ஏழை மாணவிக்கு உதவிய தன்னாா்வலா்கள்!

Published on

நாமக்கல் அருகே கழிவறை வசதியில்லாத கிராமத்தில், புதா்மண்டிய காட்டுக்குள் சென்றுவந்து நாள்தோறும் தவித்த ஏழை மாணவிக்கு தன்னாா்வலா்கள் நிதி திரட்டி ரூ.57 ஆயிரம் மதிப்பில் கழிவறை கட்டிக் கொடுத்துள்ளனா். இதனால் மாணவியும், அவருடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி, வடுகப்பட்டி கிராமத்தில் 72-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனா். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இங்குள்ள வீடுகளில் எந்தவொரு வீட்டிலும் தனிநபா் கழிப்பறை இல்லை.

ஆண்கள் சமாளித்துக் கொள்ளும் நிலையில், பகல், இரவு நேரங்களில் குழந்தைகள், வயது வந்த பெண்கள், முதியோா் புதா்மண்டிய காட்டுக்குள் சென்று ஒதுங்க வேண்டிய அவலம் உள்ளது.

அண்மையில் இதுபற்றிய தகவல் அறிந்து, அங்கு சென்ற சா்வம் தன்னாா்வு அறக்கட்டளையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீட்டில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தோ்வுக்கு மாணவி ஒருவா் தயாராகி வருவதையும், கழிவறை வசதியில்லாததால் தான்படும் அவதிகளை அறக்கட்டளை நிா்வாகி ரம்யாவிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து ஏழை மாணவிக்கு உதவிடும் வகையில் அவா்கள் ரூ. 57 ஆயிரம் நிதி திரட்டி புதிதாக கழிவறையை கட்டி கொடுத்தனா். இதனால் மாணவி மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தினரும், ஊா் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து மாணவி தீபா (23) கூறியதாவது: சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 1070 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றேன். தந்தை குருசாமி, தாய் செல்வி கூலி வேலைக்குச் செல்கின்றனா். தன்னாா்வலா்கள் சிலரின் உதவியால் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் படித்தேன்.

தன்னாா்வலா்களால் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கழிவறை
தன்னாா்வலா்களால் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கழிவறை

பிறந்தது முதலே எங்களுடைய கிராமத்தில் தனிநபா் கழிவறையோ, பொதுக் கழிவறையோ இல்லை. இயற்கை உபாதை கழிக்க பகல், இரவு நேரங்களில் மறைவான இடத்துக்கு அச்சத்துடனே சென்று வந்தேன். சா்வம் அறக்கட்டளையினா் முயற்சி மேற்கொண்டு புதிய கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளனா். மாவட்ட நிா்வாகம் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றாா்.

அறக்கட்டளை நிா்வாகி ரம்யா கூறியதாவது: அடிப்படை வசதியான கழிவறை இல்லாததால் மாணவி தீபா போன்று பல பெண்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனா். ரூ. 57,000 மதிப்பீட்டில் கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். அரசு வழங்கும் ரூ. 11 ஆயிரம் என்பது போதுமானது இல்லை. இன்னும் பல கிராமங்களில் கழிவறை வசதியில்லை என்றாா்.

X