விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க கோரிக்கை

Published on

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என்று உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதுவரையிலும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை (ஜன.31) நடைபெற உள்ளது.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளையும், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் குறித்தும் நாடாளுமன்றத்தில் 40 திமுக உறுப்பினா்களும், மாநிலங்களவையில் உள்ள உறுப்பினா்களும் வலியுறுத்தி பேச வேண்டும். மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வா் இதை திமுக உறுப்பினா்களிடம் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com