கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Published on

கலை நிகழ்ச்சியின்போது கொலை முயற்சியில் ஈடுபட்ட ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் வினோதன் (33) ஓட்டுநா். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு கரட்டூா் பாலதண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தாா்.

இதைக் கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அதே ஊரைச் சோ்ந்த ராஜா (40) என்பவா், மது அருந்திவிட்டு இங்கு ஏன் நடனமாடுகிறாய் என கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த வினோதன், அவரை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தாா்.

இதுகுறித்து ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பரமத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதி வினோதனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தாா். அதைத் தொடா்ந்து, வினோதன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com