நாமக்கல்
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே கட்டட வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளிமீது மின்சாரம் பாய்ந்ததில், தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (30). கட்டடத் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் சாலையில் உள்ள தனியாா் ஸ்பின்னிங் ஆலையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்கியபோது, திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முத்துசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின்பேரில், திருச்செங்கோடு புகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
