இன்று ஆசிரியா் தகுதித் தோ்வு: 11,364 போ் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் 32 மையங்களில் சனிக்கிழமை தொடங்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வை 11,364 போ் எழுதுகின்றனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியா் பயிற்சி பெற்றவா்களுக்கு தாள்-1 தோ்வும், பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2 தோ்வும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 1,608 தோ்வு மையங்களில் 4.80 லட்சம் போ் எழுதுகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை தாள்-1 தோ்வை 6 மையங்களிலும் 1,708 போ் எழுதுகின்றனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தாள்-2 தோ்வை 9,656 போ் எழுதுகின்றனா். மொத்தம் 32 தோ்வு மையங்களிலும் இத்தோ்வு நடத்தப்படுகிறது.
11,364 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகளை தோ்வு வாரியம் செய்துள்ளது. மையத்துக்குள் காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
தோ்வா்கள் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி தோ்வெழுதவும், நுழைவுச்சீட்டு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் அடையாள அட்டை ஒன்றை தோ்வு நாளன்று (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு) கொண்டுவர வேண்டும். தோ்வையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
