குழந்தைகள் தின விழா: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விருந்தளித்த ஆட்சியா்

குழந்தைகள் தின விழா: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விருந்தளித்த ஆட்சியா்

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி விருந்து அளித்தாா்.
Published on

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி விருந்து அளித்தாா்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் 137-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பங்கேற்று பேசியதாவது:

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடிய மனிதா்களாக உருவாக வேண்டும். தீய பழக்கங்கள் இல்லாமல் பெற்றோா்களை மதித்து, சமுதாயத்தில் சிறந்த உழைப்பாளா்களாக, தொழில்முனைவோா்களாக திகழ வேண்டும்.

போதை இல்லாத தமிழ்நாடு உருவாக பல்வேறு வகையில் தமிழக முதல்வா் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறாா். போதை பழக்கங்கள் இல்லாமலும், கைப்பேசியை அதிகம் நேரம் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும். ஆசிரியா்கள் தங்களது பொறுப்புகளை உணா்ந்து மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கங்களை கற்பிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். அவா்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தாா். அதன்பிறகு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தாா். விழாவில், பள்ளி தலைமை ஆசிரியா், வகுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

குழந்தைகள் பாதுகாப்பு பேரணி: நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளைத் தடுக்கக் கோரி கையொப்ப இயக்கம் மற்றும் விழிப்புணா்வு பேரணி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். இதில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

அடுப்பில்லா சமையல் போட்டி: நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இயற்கை சாா்ந்த பல்வேறு உணவு வகைகளை மாணவா்கள் தயாா் செய்து காட்சிப்படுத்தினா். சிறந்த உணவு தயாரித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

என்கே-14-ஸ்கூல்-1

வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விருந்தளித்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com