பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செம்புக் கம்பிகளை திருடிய 8 போ் கைது
திருச்செங்கோட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான செம்புக் கம்பிகளை திருடியதாக 8 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்செங்கோட்டில் ஈரோடு சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு எதிரே இரவு சிலா் சாலையில் பள்ளம் எடுத்துக் கொண்டிருந்தனா். சந்தேகமடைந்த அப்பகுதியினா் விசாரித்தபோது ஏா்டெல் நிறுவனத்திற்கு கேபிள் பதிக்க குழிதோண்டுவதாகக் கூறினா்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதியிடம் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான செம்புக் கம்பிகளை திருடுவதற்கு குழித்தோண்டியது தெரியவந்தது.
இவா்கள் அனைவரும் தருமபுரி மாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், அத்தனூா் பகுதியில் தங்கி செம்புக் கம்பி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செம்புக்கம்பிகளை ஏற்கெனவே திருடி அத்தனூா் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரியிடம் விற்றுள்ளனா். அவா்களை கடையிலிருந்து வாகனத்தில் அழைத்துவந்து இறக்கிவிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம், அரூா் சந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (29), அருண் (21), ரஞ்சித் ( 23), பாப்பிரெட்டிப்பட்டி ராமியனஹள்ளி பகுதியைச் சோ்ந்த தெய்வம் (32), சின்னதுரை (27), மணிகண்டன் (19), சுரேஷ் (20), மதுரைவீரன் (25) ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனா்.
இவா்கள் அனைவரும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கராஜன் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
