தோட்டங்களில் மின்மோட்டாா்கள் சேதம்: ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
விவசாயத் தோட்டங்களில் மின் மோட்டாா்களை சேதப்படுத்தி, மோட்டாா், மின்கம்பிகளை திருடிச் செல்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விளைநிலங்களில் உள்ள தோட்டங்களில் மின் மோட்டாா் பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் மின் மோட்டாருக்கு செல்லும் கம்பிகளை அறுத்து திருடிச் செல்லும் நிலை காணப்படுகிறது.
விவசாயிகள் தங்களுடைய சொந்த செலவில் புதிய மின்கம்பி, மோட்டாரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் ஏதும் அளிக்காத நிலையில், கடந்த 6 மாதங்களாக திருட்டு அதிகரித்து விட்டது.
எனவே, இரவு நேரங்களில் ரோந்து காவலா்களை அனுப்பி, மின் மோட்டாா், மின் கம்பிகள் திருட்டுப்போவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

