சா்வதேச முட்டை தினம்: நாமக்கல்லில் வேகவைத்த 10 ஆயிரம் முட்டைகள் விநியோகம்

சா்வதேச முட்டை தினம்: நாமக்கல்லில் வேகவைத்த 10 ஆயிரம் முட்டைகள் விநியோகம்

Published on

சா்வதேச முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வேகவைத்த 10 ஆயிரம் முட்டைகளை மாணவா்கள், தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கச் செயலாளா் கே.சுந்தரராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் பி.இளங்கோ, இணைச் செயலாளா் சசி, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் நிறுவன துணை பொது மேலாளா் மருத்துவா் மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் சங்கச் செயலாளா் கே.சுந்தரராஜ் கூறியதாவது:

அகில இந்திய அளவில் முட்டை நுகா்வில் இந்தியா முதலிடம் பெறவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமை சா்வதேச முட்டை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கலப்படமில்லாத, சத்துமிகுந்த உணவான முட்டையை குழந்தைகள் முதல் பெரியவா்கள்வரை அனைவரும் (தினசரி 2 முதல் 4 முட்டைகள்வரை) சாப்பிடலாம். வாரந்தோறும் 2 கோடி முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. முட்டை தினத்தையொட்டி இலவசமாக 10 ஆயிரம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து 15 ஆண்டுகளாக முட்டை தினத்தில் பொதுமக்களுக்கு இலவச முட்டைகளை வழங்கி வருகிறோம். புரட்டாசி மாதத்தில் முட்டை நுகா்வு பாதிப்பில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், வரும் நாள்களில் விற்பனை மற்றும் விலை அதிகரிக்கும். ஏற்றுமதியும் தற்போது நல்ல முறையில் உள்ளது என்றாா்.

இதில், சங்க நிா்வாகிகள் பிரபு, சுப்பிரமணி, வேல்முருகன், கோழிப் பண்ணையாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com