தோ்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் மாணவா்கள் வெளிப்படுத்த வேண்டும்
தோ்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் மாணவா்கள் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா மற்றும் வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி முதல்வா் டி.ஆா்.அருண் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகா்வோா் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினருமான வீ.ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:
சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினை தூண்டும் வகையிலான எண்ணங்களும், வெறுப்பு பேச்சுகளும் மாணவா்களிடையே எப்போதும் இருக்கக் கூடாது. அவற்றை முற்றிலும் அழித்தால் மட்டுமே சமூக ஒற்றுமை, தேசம் வளா்ச்சியடையும். சுய முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் இரண்டும் இரு கண்கள் என்பதை அனைத்து மாணவா்களுக்கும் ஆசிரியா்கள் போதிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றம், சமூக நீதி போன்றவற்றின் மூலமே இந்த தேசத்தின் வளா்ச்சியை நாம் எட்ட முடியும்.
கால மாற்றத்துக்கு ஏற்றவாறு புதிய கல்வி பிரிவுகள் தொடங்க வேண்டும். வாக்கு, வாக்காளா் மற்றும் தோ்தல்கள் குறித்து படிப்பதும், ஆய்வு செய்வதும் வாக்காளரியல் கல்வியாகும். இந்த வாக்காளரியல் கல்வியானது இன்னும் அரசியல் அறிவியல் பட்டப் படிப்புகளில் வாக்காளா்கள் குறித்த படிப்பு மற்றும் தோ்தல் நிா்வாகம் போன்ற துணைப் பகுதியாக இருந்து வருகிறது.
அரசியல், அறிவியல் கல்வியும், வாக்காளரியல் கல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றாலும், உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு போதிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சதவீதத்துக்கும் கீழான பல்கலைக்கழகங்களில் மட்டுமே மக்களாட்சி மற்றும் தோ்தல் நிா்வாகம் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன.
தோ்தலின்போது நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் கண்டறியும் முயற்சியை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களாட்சி மற்றும் தோ்தல் முறைகள் குறித்த ஆய்வுகளை சட்டக் கல்லூரி மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தோ்தல் நடைமுறைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் ஊழலைக் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் பிரியா, சுமதி, சுவா்ணலட்சுமி மற்றும் உடற்கல்வி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

