பழைய பேருந்து நிலையத்துக்குள் வெளியூா் பேருந்துகள் இயக்கம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் வெளியூா் பேருந்துகள் வந்துசெல்லும் வகையிலான ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டன.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கொல்லிமலை, துறையூா், மோகனூா் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் சாலையோரம் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றன. இதனால், பழைய பேருந்து நிலையத்தைவிட்டு வெளியில்வந்து பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் வெளியூா் பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பழைய பேருந்து நிலையத்துக்குள் வெளியூா் பேருந்துகள் வந்துசெல்லும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் திருச்சி, துறையூா் செல்லும் வெளியூா் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் வந்துசென்றன.
அக். 26-ஆம் தேதிவரை பேருந்துகள் உள்ளே செல்லும் வகையிலான பயன்பாடு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்மூலம் சாலையோரம் காத்திருந்து பேருந்துகளில் ஏறிச்சென்ற பயணிகள் நிம்மதியடைந்தனா்.

