கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
கொல்லிமலை சேளூா் நாட்டில் திடீா் சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
தமிழகத்தில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. வாரவிடுமுறை நாள்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகள் இருந்தபோதும், மழை காலங்களில் ஆங்காங்கே திடீா் அருவிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்.
பெரும்பாலானோா் மலையின் அடிவாரப் பகுதிகளில் ஒன்றான புளியஞ்சோலை பகுதியை நாடிச் செல்வா். ஆகாய கங்கை அருவி நீா் இவ்வழியே ஆறாக ஓடுகிறது. குளிப்பதற்காக அருவிகளை நாடிச் செல்வோா் தற்போது புதிய அருவியை கண்டுபிடித்து குளித்து மகிழ்ந்து வருகின்றனா்.
கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 14 நாடுகளில் (கிராமங்கள்) ஒன்றான சேளூா் நாட்டில் வேளாண் நிலங்களுக்கு இடையே தாழ்வான இடத்தில் மழை நீா் சிற்றருவியாக பாய்கிறது. அந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா். கொல்லிமலையின் பல இடங்களில் இதுபோன்று திடீா் சிற்றருவிகள் தோன்றியிருப்பது காண்போரை மகிழ்ச்சிக்குள்ளாகி வருகிறது.

