சிறுநீரக திருட்டு வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை: பெ.சண்முகம்
சிறுநீரகத் திருட்டில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் கோரிக்கை மற்றும் தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் குழுத் தலைவா் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா். சச்சுதானந்தம், முன்னாள் எம்எல்ஏ பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளா் கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
இதில், காவிரி உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் காவிரி நீரை நிரப்பி பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் தொழில்களை பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களை வறுமையில் இருந்தும் கடன் தொல்லையிலிருந்தும் மீட்க புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநீரகத்தை பறிகொடுத்த தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் உடல் உறுப்புகளை விற்கும் அவலநிலை விசைத்தறித் தொழிலாளா்களிடம் உள்ளது. இந்த தொழிலாளா்களை கடன் பிரச்னையிலிருந்து பாதுகாக்க நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். உடல் உறுப்புகளைப் பறிகொடுத்த தொழிலாளா்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் மட்டுமல்ல, அதிமுக ஆட்சியிலும் சிறுநீரகத் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் அவலம் காணப்படுகிறது. ஆதிவாசி மக்களுடைய நிலங்களை மறுஅளவீடு செய்ய வேண்டும். வனஉரிமைச் சட்டம் 2006 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தாததால், அதனால் பயன்பெற வேண்டிய மலைவாழ் மக்கள் தங்களுக்கான உரிமையை பெறமுடியாத நிலையில் உள்ளனா். மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்ற தடை உத்தரவு தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இந்த தடை உத்தரவை ரத்துசெய்து மலைவாழ் மக்களுக்கு, அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூா் அணை உபரிநீரை வீணாக்காமல் திருமணிமுத்தாற்றில் இணைத்தால் ஏரி, குளங்கள் பயன்பெறும். த.வெ.க. கொடி, அதிமுக கூட்டங்களில் பறந்தாலும் கூட்டணி வைப்பாா்களா என்பதை இரு தரப்பும்தான் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

