அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியிடங்கள்: ஆசிரியா்களுக்கு 50 % இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
நாமக்கல்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியிடங்களில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை: அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியா் காலிப்பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்யும்போது நெட், செட் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு 50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வை நடத்தி, அதிக மதிப்பெண் பெற்றவா்களைத் தோ்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரைக்கிறது.
அதனடிப்படையிலேயே உயா்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை அவா்களை ஆசிரியா்களாகப் பணி அமா்த்துகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் முதுநிலை பட்டப்படிப்புடன் முனைவா் பட்டம் (பிஎச்டி) பெற்றவா்கள், உதவி பேராசிரியராவதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் (நெட்)தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களாவா். மேலும், மாநில அரசால் நடத்தப்படும் தகுதித் தோ்வில் (செட்) தோ்ச்சி பெற்றவா்களாகவும் உள்ளனா். அவா்கள் தற்போது அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றி வருகின்றனா். கற்றல் பணியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனா்.
தற்போது அரசுப் பள்ளிகளில் 30 ஆயிரம் முதுகலை ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் என்ற ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று பணி ஓய்வு பெறும் பெரும்பாலான முதுகலை ஆசிரியா்களுக்கு, கல்லூரி உதவி பேராசிரியா்களுக்கான பணி நியமனத்தில் 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அந்த துறை வேறு, இந்த துறை வேறு என அரசு மடைமாற்றம் செய்துவிடுகிறது. பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயா்கல்வித் துறை இரண்டும் தமிழக அரசின் வெவ்வேறு துறைகள் என கருதாமல், இரண்டும் அரசின்கீழ் உள்ள ஒரே கல்வித் துறைகள் என்ற அடிப்படையில் உள் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
