

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 4.22 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.
முள்ளுக்குறிச்சி, மூலப்பள்ளிபட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூா்த்திபாளையம், ஆயில்பட்டி, காா்கூடல்பட்டி, பெரப்பன்சோலை, ஊனந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் சாலை, குடிநீா், கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டப்பட்டது. முள்ளுக்குறிச்சியில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசுகையில், தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மகளிா், மாணவா்கள், ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் செயல்டுத்தியுள்ளது என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஷ்குமாா் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளது. தாயுமானவா் திட்டம், அன்புக் கரங்கள் திட்டம், மகளிா் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தீட்டி சிறப்புடன் முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில் ஏராளமான பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசுவாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்விழி, பசுபதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.