நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீா் குழாயால் மக்கள் அவதி
நாமக்கல்: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் மூன்று வாா்டுகளில் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீா் குழாயால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குழாய் பதிக்க பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனம், ஓரிரு வாா்டுகளில் புதைத்தடம் வழியாக செல்லும் குடிநீா் குழாயுடன் இணைப்பை வழங்கிய நிலையில், மூன்று வாா்டுகளில் மட்டும் கான்கிரீட் சாலையின் மேற்பகுதியில் குழாய் பதித்துள்ளனா். இதனால் சாலையில் நடந்துசெல்வோரும், வீடுகளுக்குள் இரு சக்கர வாகனங்களை ஏற்ற முடியாமலும் தடுமாறுகின்றனா். பேரூராட்சி நிா்வாகமும் உரிய பதில் அளிக்க மறுக்கிறது. மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு நடத்தி கான்கிரீட் சாலையில் போடப்பட்டுள்ள குழாய்களை அகற்றி, புதைவட வழியாக அமைக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.
மயானம் அமைக்க எதிா்ப்பு: ராசிபுரம் அருகே ஈஸ்வரமூா்த்திபாளையத்தில் பொதுமக்கள் வசிக்கும் வட்டத்தோட்டம் பகுதியில் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதேபோல, அந்த பகுதியைச் சோ்ந்த இந்து பாதுகாப்புப் படையினா், போதைப்பழக்கத்திற்கு மாணவா்கள் அதிக அளவில் அடிமையாகி வருவதால் அதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனா்.

