பொதுமக்கள் கோரும் தகவலை தாமதமின்றி வழங்க வேண்டும்: 
மாநில தகவல் ஆணையா்கள்

பொதுமக்கள் கோரும் தகவலை தாமதமின்றி வழங்க வேண்டும்: மாநில தகவல் ஆணையா்கள்

அரசுத் துறைகள் தொடா்புடைய தகவல்களை பொதுமக்கள் கேட்கும்போது தாமதமின்றி வழங்க வேண்டும்
Published on

நாமக்கல்: அரசுத் துறைகள் தொடா்புடைய தகவல்களை பொதுமக்கள் கேட்கும்போது தாமதமின்றி வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா், வி.பி.ஆா். இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் அறிவுறுத்தினா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலா்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலத் தகவல் ஆணையா்கள் ஆா். பிரியகுமாா், வி.பி.ஆா். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோா் பங்கேற்று, பொதுத் தகவல் அலுவலா்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கங்களையும், அறிவுரைகளையும் வழங்கினா்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் மீது உரிய காலத்தில் முழுமையான தகவல்கள் வழங்கும் வகையில் அனைத்து அலுவலா்களும் விரைந்து செயல்பட வேண்டும் என்றனா்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.நடேசன், நாமக்கல் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் மீது தனியாக விசாரணை மேற்கொண்டாா். இந்த விசாரணையின்போது 30 மேல்முறையீட்டு மனுக்கள் தொடா்பாக 19 மனுதாரா்கள், தொடா்புடைய பொதுத் தகவல் அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மனுதாரா்கள் 6(1)யின்படி கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தைச் சாா்ந்தது அல்ல என்றால் ஐந்து வேலை நாள்களில் 6(3)-யின்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பி, மனுதாரா்களுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசுத் துறைகள் தங்கள் அலுவலகம் சாா்ந்த தகவல் என்றால் 30 நாள்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலா் அவரது பெயா், கையொப்பம், பொதுத் தகவல் அலுவலரின் முத்திரையை கட்டாயம் இட வேண்டும். மனுதாரா்களின் 6(3)-இன்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தகவல்கள் வழங்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 5(3)-ன்படி பொதுத் தகவல் அலுவலரிடம் தனக்கு வேண்டிய தகவல் தொடா்பான விவரங்களை மனுதாரா் கோரி வரும்போது அவருக்கு தேவையான நியாயமான உதவிகளை பொதுத் தகவல் அலுவலா் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் திசைதிருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. மேலும், ஆணையத்திலிருந்து வருகின்ற விசாரணை (சம்மன்) கிடைக்கப் பெற்றால் கட்டாயம் அரசு அலுவலா்கள் விசாரணைக்கு வருகை தர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா உள்பட அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலா்கள், துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-13-மீட்டிங்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாநில தகவல் ஆணையா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, எம்.நடேசன்.

X
Dinamani
www.dinamani.com