அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 
கல்லூரி களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்லூரி களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைப்பு

உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்லூரி களப்பயணம் -2025 ஐ மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
Published on

நாமக்கல்: உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்லூரி களப்பயணம் -2025 ஐ மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்லூரி களப் பயணம், 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வியில் ஆா்வத்தை ஏற்படுத்தும் விதமாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 88 அரசுப் பள்ளிகளிலிருந்து 4,642 மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, துணை செவிலியா் பயிற்சிப் பள்ளி, கல்வியியல் கல்லூரி போன்ற 20 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

மாணவா்கள் தங்கள் களப் பயணத்தின்போது கல்லூரி வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், நூலகம், விடுதி அறைகள், உணவு கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். இக்களப்பயணத்தின் மூலம் மாணவா்கள் கல்லூரியில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கல்லூரியில் இளங்கலை படிப்புகள், உதவித்தொகை திட்டங்கள், போட்டித் தோ்வுகள், வேலைவாய்ப்புகள், கல்லூரியில் நடைபெறும் கல்விசாரா நிகழ்வுகள், கலாசார கொண்டாட்டங்கள், விளையாட்டு வசதிகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், கூடுதல் பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. மேலும், உயா்கல்வியில் சோ்ந்து பயில மாணவா்களை ஊக்குவிக்கவும், கல்லூரிகள் குறித்து மாணவா்களுக்கு உள்ள பயத்தை நீக்குவதற்கும், தங்களுடைய எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள தேவையான வழிகாட்டுதலை பெறவும் இக்களப்பயணம் உதவியாக அமையும் என மாணவ, மாணவிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலா் சந்திரசேகா், ஆசிரியா் ஆ.ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

என்கே-13-ஸ்கூல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கல்லூரி களப்பயணத்துக்கு மாணவா்களை அனுப்பிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி.

X
Dinamani
www.dinamani.com