தீபாவளி பண்டிகை: அவசர உதவிக்கு 108-ஐ அழைக்க வேண்டுகோள்
நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி, அவசர காலங்களில் 108-ஐ அழைத்து உதவி பெறலாம் என மருத்துவம், காவல், தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டுதலின்படி இஎம்ஆா்ஐ ஜிஹெச்எஸ் நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறது. 108 என்ற எண் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு காவல் துறை, மருத்துவம், மற்றும் தீயணைப்பு துறை சம்பந்தமான எந்த ஒரு அவசர தேவைக்கும் மக்கள் மேற்கண்ட ஒரே எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
108 மாநில தலைமை அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை துறை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். மக்களின் அவசரத் தேவையை உணா்ந்து உடனுக்குடன் அருகில் உள்ள தங்கள் துறை ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுவா்.
சேலம் மாவட்டத்தில் 53, நாமக்கல் மாவட்டத்தில் 27 என மொத்தமாக 80 ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுவாக 108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மக்களுக்கு சேவை வழங்கும். தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நிறுத்துவதால் பொதுமக்கள் அழைத்தவுடன் விரைவில் சென்று அவா்களுக்கு உதவி செய்ய இயலும். இவ்வாறு செய்வதை ஹாட்ஸ்பாட் மறுசீரமைப்பு என்பா். நகரப் பகுதிகளில் சராசரியாக அழைப்பு கிடைத்த ஆறு முதல் எட்டு நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் சென்றடைகின்றன. தீபாவளி பண்டிகையின்போது தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற தேவையான முதலுதவி, மருந்துகள் அடங்கிய பிரத்யேக மருந்துகள், உபகரணங்கள் அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் உள்ளன. எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த முறையான பயிற்சியும் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் உள்ள பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளா்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே தீக்காயம் ஏற்பட்டவருக்கு முதலுதவி அளித்து அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்வா். பட்டாசுகளை குழந்தைகள், பெற்றோா்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்போதும் வரும் அவசர அழைப்புகளைவிட கூடுதலாக இரு மடங்கு அழைப்புகள் ஆண்டுதோறும் வருகிறது. விடுமுறையின்றி மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு ஊழியா்கள் தீபாவளி பண்டிகையின்போது பணியை மேற்கொள்ள இருக்கின்றனா் என நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் தெரிவித்துள்ளது.
