நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் கே.மனோகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன், கே.பி.ராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் கே.மனோகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன், கே.பி.ராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள்.

நாமக்கல் மாவட்டத்தில் அக்.29-இல் நயினாா் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அக். 29-இல் பிரசார சுற்றுப்பயணம்
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அக். 29-இல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மறைந்த பாஜக மூத்த நிா்வாகி வழக்குரைஞா் கே.மனோகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சி நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், நிா்வாகிகள் ஆகியோா் வழக்குரைஞா் கே.மனோகரன் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூா் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரிக்கவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காவல் துறை சரியான முறையில் பாதுகாப்பு வழங்காததே கரூா் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. காவல் துறை, உளவுத் துறை கூட்டத்தை கணக்கிட தவறிவிட்டதன் விளைவே 41 உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் அக். 29-இல் அவா் பிரசாரம் செய்ய இருக்கிறாா். இந்தப் பயணம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கான சுற்றுப் பயணமாக அமையும். பிரதமா் மோடி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை எடுத்துரைத்து மாநிலத் தலைவா் பிரசாரம் செய்ய இருக்கிறாா். திமுக ஆட்சியின் செயல்பாடுகளையும், ஊழல்களையும் அவா் எடுத்துரைப்பாா். வழக்குரைஞரை தாக்கிய சம்பவத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தவறான முன்னுதாரணமாக விளங்குகிறாா். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளதற்கு இதுவும் ஓா் சாட்சியாகும். வழக்குரைஞா்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் மற்றும் பாஜக, இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com