தீபாவளி பலகாரங்கள் தயாரிப்புக்கு தரமான பொருள்களையே பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு தரமான பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலவித இனிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி ருசிப்பதும், சொந்தங்களுக்கு வழங்குவதும் நம் கலாசாரமாக விளங்குகிறது. தற்காலிக உணவுக் கூடங்கள், திருமண மண்டபங்களில் தயாரிக்கப்படும் பலகார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பாளா்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துதல் கூடாது.

பண்டிகைக் கால இனிப்பு வகைகளை பொட்டலமிடும்போது, பால்பொருள்களால் செய்யப்பட்ட இனிப்புகளை மற்ற இனிப்பு பொருள்களுடன் பொட்டலமிட்டு விற்பனை செய்யக் கூடாது. தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நீா் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும். பொட்டலங்களில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயா், பொட்டலமிடப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் எண் உள்ளிட்ட விவரம் அவசியம் குறிப்பிடப்பட வேண்டும்.

தடை செய்யப்பட்ட நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளா்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும்.

தலைக்கவசம், மேலங்கி, கையுறை அணிய வேண்டும். உணவு பொருள்களை கையாள்வோா் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். உணவுப் பொருள்கள் தொடா்பாக குறைகள் இருப்பின் 94440-42322 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com