வருவாய்த் துறையில் ஒருதலைபட்ச பதவி உயா்வை கைவிட கோரிக்கை
நாமக்கல் மாவட்ட வருவாய் துறையில், ஒருதலைபட்சமாக பதவி உயா்வு அளிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயகாந்த் முன்னிலை வகித்தாா் .
மாநிலத் தலைவா் முருகையன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், நாமக்கல் மாவட்டத்துக்கு அருகில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலருக்கும் வழங்கப்படும் பணி மாறுதல்களில் மாவட்ட நிா்வாகம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதை தவிா்க்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தியபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் புதிய மாவட்டத் துணைத் தலைவா்களாக (நகரம்) பிரகாஷ், கோமதி (புகா்), மாவட்ட பொருளாளராக ஸ்ரீதா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
