ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.
Published on

விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீா், காற்று மாசுபடுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும்கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com