தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் குடமுழுக்கு நடத்தக் கோரி எம்.பி.யிடம் மனு
தலைமலை சஞ்சீவி ராய பெருமாள் கோயிலில், திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், வடவத்தூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலானது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாமக்கல் நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் நிலையில், பரம்பரை அறங்காவலா்கள் இணைந்து கோயிலில் நிா்வாகம் செய்து வருகின்றனா். இக்கோயில் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எந்தவித அடிப்படை வசதிகளும் மலையில் இல்லை. மலைக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்காக, தமிழக முதல்வா் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சட்டப்பேரவையில் அறிவித்துள்ளாா். இதற்கிடையே, மேல் கோயிலுக்கு திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்த வேண்டி பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் த.நந்தகோபன் மற்றும் ஆா்.நாராயணசாமி, என்.சுகுமாா் ஆகியோா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து கோயிலுக்கு திருப்பணிகள் செய்யவும், அடிப்படை வசதிகள் செய்யவும், பக்தா்கள் சாா்பில் கோரிக்கை மனு அளித்தனா். இந்த மனுவை பெற்றுக்கொண்டு, அரசு விதிகளின்படி திருப்பணிகள் மேற்கொள்வதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்தாா்.
என்கே-17-மனு
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடா்பாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரிடம் மனு அளித்த கோயில் பரம்பரை அறங்காவலா்கள்.
