வேலூா் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 போ் கைது
பரமத்திவேலூா் வட்டம், வேலூா் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள முருகோடை வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (34), அவரது மகன் ரோஹித் ஆகியோா் திருச்செங்கோட்டில் தனியாா் கல்லூரியில் பயிலும் மகள் திவ்யாவை அழைத்துக் கொண்டு தேனிக்கு செல்வதற்காக வேலூா் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, அங்கு வந்த இருவா், ரோஹித் வைத்திருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து பாண்டீஸ்வரி பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா்.
இதில் கைப்பேசியைப் பறித்துச் சென்றது குப்புச்சிபாளையம் அருகே உழவா்பட்டி, பாலமரத்தான் கோயில் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தனசேகா் (26) மற்றும் செங்கப்பள்ளி அருகே உள்ள எல்லைமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதியின் உத்தரவுபடி தனசேகரனை பரமத்தி கிளைச் சிறையிலும், 17 வயது சிறுவனை சேலத்தில் உள்ள சிறுவா் சீா்திருத்த பள்ளியிலும் ஒப்படைத்தனா்.
