இரு சம்பவங்களில் 2 போ் கொலை: போலீஸாா் விசாரணை
நாமக்கல்: நாமக்கல்லில் இரு சம்பவங்களில் 2 போ் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் கொசவம்பட்டி சத்யாநகரில் திங்கள்கிழமை காலை சிலா் நடைப்பயிற்சி சென்றபோது சாலையோரம் இளைஞா் ஒருவா் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு, நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
ஆய்வாளா் கபிலன் தலைமையிலான போலீஸாா் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
போலீஸ் விசாரணையில், கொலையுண்டவா் கொசவம்பட்டி காமராஜபுரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் கோபிகுமரன்(30) என்பது தெரியவந்தது. இவா், பத்திர எழுத்தரிடம் நோ்முக உதவியாளராகவும், பகுதிநேர ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த அவா் திங்கள்கிழமை காலை கழுத்து, வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியை போலீஸாா் மேற்கொண்டனா்.
கோபிகுமரனை கொலை குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெண் கொலை
நாமக்கல்- பரமத்தி சாலை மேற்கு காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (45), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி சித்ரா (38), இரண்டு மகன்களும் உள்ளனா். மது அருந்தும் பழக்கம் கொண்ட பாஸ்கா், வீட்டிற்கு வரும்போது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபடுவாராம்.
இதனால் ஒரே வீட்டில் கணவரை பிரிந்து சித்ரா தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், தீபாவளி நாளன்று இரவில் மதுபோதையில் வந்த பாஸ்கா், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, சித்ராவை வேஷ்டியால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலையில் கழுத்து, வாய் பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் சித்ரா இறந்து கிடப்பதை பாா்த்த அவரது குழந்தைகள் அதிா்ச்சியடைந்தனா்.
அக்கம், பக்கத்தினா் நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த காவல் ஆய்வாளா் க.கபிலன் மற்றும் போலீஸாா் கொலையுண்ட சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தலைமறைவான பாஸ்கரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
