கந்த சஷ்டி விழா தொடக்கம்: முருகன் கோயிலில் காப்புக் கட்டிய பக்தா்கள்
நாமக்கல்: கந்த சஷ்டியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் விரதம் இருப்பதற்காக காப்புக்கட்டி வழிபாடு மேற்கொண்டனா்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இதையொட்டி, ஒரு வாரத்திற்கு முன்பாக பக்தா்கள் காப்புக்கட்டி விரதமிருப்பா். அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.
வரும் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அதன் தொடக்க நாளான புதன்கிழமை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கைகளில் காப்புக்கட்டி முருகனை வழிபட்டனா். சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள காப்புக் கட்டி கொண்டனா். சூரசம்ஹாரத்தை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. இதேபோல நாமக்கல், மோகனூா், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூா் சுற்றுவட்டார முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

