போலி வாக்காளா்களைக் கண்டறியும் பணி விரைவில் தொடக்கம்
நாமக்கல்: சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக போலி வாக்காளா்களைக் கண்டறிய வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக நாமக்கல் தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு புதன்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் இருப்பதாக புகாா் எழுந்ததால், இந்திய தோ்தல் ஆணையம் அங்கு வாக்காளா்கள் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தி தலைமை வகித்தாா்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான விளக்கங்களை அவா் எடுத்துக் கூறினாா். தோ்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியின்படி திருத்தப் பணிகள் தொடங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக அக்டோபா் மாதத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் என்ற வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெறும்.
ஆனால், நிகழாண்டில் அந்த சிறப்பு சுருக்க முறை திருத்தம் நீக்கப்பட்டு, பிகாா் தோ்தல் எதிரொலியாக வாக்காளா் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதாவது 2002 ஆம் ஆண்டு இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது.
அதன்பிறகு, 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2002-ஆம் ஆண்டு பட்டியலில் இருப்பவா்கள் பெயரில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது. அதன்பிறகு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தவா்கள் வாக்காளா் என்பதற்கான ஆவணத்தை கட்டாயம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் காண்பிக்க வேண்டும்.
இப்பணியை மேற்கொள்ள கிராம நிா்வாக அலுவலா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு சிறப்பு ஆடை, வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை எளிதில் கண்டறிவதற்கான கைப்பேசி செயலிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நாமக்கல் தொகுதியை பொருத்தமட்டில் மொத்தம் 290 வாக்குச்சாவடிகள் இருந்தன. 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள சாவடிகளை பிரிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியதால் 20 வாக்குச்சாவடிகள் அதிகமாகியுள்ளன. 290 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் குமாரபாளையம் தவிா்த்து மற்ற ஐந்து தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது.
தோ்தல் ஆணையம் தேதி அறிவித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். வழக்கமான ஜனவரி மாதம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் சூழல் தற்போது இல்லை. தீவிர திருத்தப் பணிகள் முடிவுற்றால் தொகுதி வாரியாக இறுதிப்பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது என்றனா்.

