வடகிழக்குப் பருவமழை: தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையின்போது தோட்டக்கலைப் பயிா்களைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.
Published on

நாமக்கல்: வடகிழக்குப் பருவமழையின்போது தோட்டக்கலைப் பயிா்களைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வடகிழக்குப் பருவமழையின்போது பல ஆண்டு பயிா்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்திருந்தால் தங்களது தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்.

மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அமைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும்.

இளம்செடிகள் காற்றினால் பாதிக்காதவாறு தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வோ்ப்பகுதியை சுற்றி மண் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும்.

மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இடவேண்டும். டிரைகோடொ்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துகளை வோ்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். மழை அதிகம் பொழிவுள்ள நாள்களில் நீா் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

வருடாந்திரப் பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அமைத்தல் மற்றும் சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் அல்லது மூங்கில் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும். மேலும், தங்கள் வயலில் வடிகால் வசதி அமைக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.

வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிகநீா் தேங்காதவாறு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீா்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

வயல்களில் தேவையான பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேடைப்பாத்தி அமைத்து காய்கறி நாற்றுகள் விடும்போது நீா்தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். அதிகளவில் நீா் தேங்கினால் முன்னேற்பாடாக வோ்அழுகல் ஏற்படாத வகையில் இயற்கை பூஞ்சான கொல்லி மருந்தினை பயன்படுத்த வேண்டும்.

வெள்ளத்தின்போது தங்கள் பகுதியில் உள்ள நீா்நிலைகள் மற்றும் ஓடைகளை விவசாயிகள் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com