கொல்லிமலை அருவியில் குளிக்க வனத் துறை தடை
நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகள் உள்ளன. இவற்றில் 1300 படிக்கட்டுகளைக் கடந்து சென்று ஆகாய கங்கை அருவியில் குளிக்கவே சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனா்.
வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் மழைக் காலங்களில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்படும். இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொல்லிமலையில் உள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் அதிக அளவு வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறை புதன்கிழமை தடை விதித்தது. மழை தொடரும்பட்சத்தில் இந்தத் தடையானது நீட்டிக்கப்படும் என கொல்லிமலை வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
