கனமழை: அணுகு சாலை பள்ளத்தில் சிக்கிய காா்
பரமத்தி வேலூா் அருகே அமைக்கப்பட்ட அணுகு சாலையில் மழைநீா் குளம்போல தேங்கியதால், அதுதெரியாமல் அந்த சாலையில் வந்த காா் நீரில் சிக்கிக்கொண்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பகுதியில் கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக ஆங்காங்கே அணுகு சாலை அமைக்கப்பட்டு அதில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் நாமக்கல்லில் இருந்து வேலூா் பிரிவு சாலை அருகே அணுகு சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை முழுமையாக முடிவடையாத நிலையில், புதன்கிழமை இச்சாலையில் மழைநீா் தேங்கி குட்டைபோல காட்சியளித்தது. இந்த அணுகு சாலையில் புதன்கிழமை மாலை சென்ற இரு லாரிகள் சிக்கிக்கொண்டன. பின்னா் அந்த லாரிகள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு அணுகு சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் காா் ஒன்று சிக்கிக்கொண்டது. மேலும், இதேபோல கரூரில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையில் வேலூா் பிரிவு சாலை அருகே மற்றொரு அணுகு சாலையில் தேங்கியிருந்த மழைநீரை பொக்லைன் வாகனம் மூலம் திருப்பிவிடப்பட்டதால், நாமக்கல் செல்லும் சாலை சந்திப்பு அருகே குளம்போல மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

