முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நாமக்கல் - மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், முருகப்பெருமான் திருவீதி உலாவும் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு தங்கக்கவச அலங்காரம், மயிலிறகு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சந்நிதியில் சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல்-துறையூா் சாலை ரெட்டிப்பட்டியில் உள்ள கந்தகிரி பழனியாண்டிவா் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலில் சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்திலும், மோகனூா் காந்தமலை பாலசுப்பிரமணியா் கோயில், வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் செல்வ விநாயகா் கோயில், கருங்கல்பாளைம், கரையான்புதுாா் கருமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா மாலை 5 மணிக்கு மேல் சிறப்பாக நடைபெற்றது.
என்கே 27- முருகன்
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சேந்தமங்கலம் தத்தகிரி முருகன்.
--
படம்-2
தங்கக்கவச அலங்காரத்தில் நாமக்கல் - மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி.
--

