சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை அருகில் உயர்
கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஓமலூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கர் சிலை அருகில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
மின் விளக்கு, அம்பேத்கர் சிலையை மறைக்கும் விதத்தில் அமைந்துள்ளதால், அதனை அகற்றக் கோரி, ஒரு தரப்பினர் விடுத்தக் கோரிக்கையின் பேரில், வியாழக்கிழமை உயர்கோபுர மின் விளக்கை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஓமலூர் வட்டாட்சியர் கற்பகவள்ளி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் நெடுஞ்செழியன், சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி, முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று இரு தரப்பினரும் கலைந்துச் சென்றனர். எனினும், தேக்கம்பட்டி பகுதியில் பதற்றம் நிலவுவதால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.