சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதியினர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை தியாகிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (37). அபிஷேக் (13), சுபஸ்ரீ (6) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். தமிழ்ச்செல்வி அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சீனிவாசனும், தமிழ்ச் செல்வியும் தங்களுக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது, மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது, எதிர்பாரவிதமாக சீனிவாசன் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது, அவரைக் காப்பாற்ற தமிழ்ச்செல்வி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, இருவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தம்பதியினர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது, இருவரும் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.