சேலத்தில் அரசுப் பொருள்காட்சி தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகள் பூமி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கின.
இதுகுறித்து மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசு அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களையும் கடைக்கோடியில் வாழும் மக்களும் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரம் நகரங்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வாழும் மக்கள், விவசாயிகள், மாலை நேரங்களில் தங்களது பொழுதைப் போக்குவதற்கு நகரங்களை நாடுவது இயல்பு. அதுபோன்ற மக்களை ஈர்க்கும் வகையில் அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப் பொருள்காட்சிகள் மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருகின்றன.
மேலும், இந்தப் பொருள்காட்சிகளில் நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை, வளம் பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பொருள்காட்சிகள் சேலம், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டு, நடைபெற்று வருகிறது. அரசுப் பொருள்காட்சிகளில் பங்கு பெறும் அரசுத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த அரசுத் துறை அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் போஸ் மைதானத்தில் நிகழாண்டில் நடைபெற உள்ள அரசுப் பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள், 5 அரசு சார்பு நிறுவனங்கள், 2 தனியார் நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. உணவு அரங்கம் உள்பட 66 கடைகளும் அமைக்கப்பட உள்ளன.
பொருள்காட்சிக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக புறக் காவல் நிலையம், தீயணைப்புத் துறை, அவசர சிகிச்சை மையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட உணவு வகைகள், ஆவின் பாலகம் என எண்ணற்ற அம்சங்களுடன் இந்தப் பொருள்காட்சி தயாராக உள்ளது.
பொருள்காட்சிப் பணிகளுக்கான தொடக்க விழா, பூமி பூஜைகளுக்கு மாநகராட்சி மக்கள் தொடர்பு துணை இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார். அரசுப் பொருள்காட்சி பிரிவு இளநிலை உதவிப் பொருளாளர் பக்த மனோகர தாஸ், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு பொருள்காட்சி தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.