சேலத்தில் வெளி மாநில மது வகைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (57). இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடம், கோழி இறைச்சிக் கடை ஆகியவற்றில் வெளி மாநில மது வகைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி அந்தப் பகுதியில் ஆய்வு நடத்திய போலீஸார் நடேசனிடம் இருந்து சுமார் 400 வெளி மாநில மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நடேசன் நீண்ட நாள்களாக இந்தக் குற்றத்தை செய்து வந்ததாகவும், எனவே அவரைக் கள்ளச்சாராயக்காரர் என்ற பிரிவில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கலாம் என்றும் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மா.பாரதி மோகன், மாநகரக் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜுக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, நடேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல், சிறையில் உள்ள நடேசனுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக வியாழக்கிழமை வெளியான மாநகரக் காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.