Enable Javscript for better performance
கிடங்காக மாறிய ஆட்சியர் அலுவலக புறக்காவல் நிலையம்- Dinamani

சுடச்சுட

    

    கிடங்காக மாறிய ஆட்சியர் அலுவலக புறக்காவல் நிலையம்

    By  சேலம்,  |   Published on : 27th March 2014 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் பயன்படுத்தப்படாமல் சிமெண்ட் மூட்டைகளை வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.
     சேலம் ஆட்சியர் அலுவலக வளாகம் 50-க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும், புறக் காவல் நிலையம், இரு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், உணவு விடுதி உள்ளிட்ட கடைகள், ஓய்வு அறை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
     இந்த நிலையில், பிரதான நுழைவு வாயில் அருகில் காவல் துறைக்கு அறை ஒதுக்கப்பட்டதால், புறக்காவல் நிலையத்துக்காக உணவு விடுதி அருகில் கட்டப்பட்ட அறை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே, ஆட்சியரின் கார் நிறுத்தும் இடத்தையொட்டி உள்ள பகுதியில் வாகன நிறுத்துமிடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
     இதற்கான சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை வைக்கும் கிடங்காக புறக்காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
     கோடைக் காலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும் நிலையில் காவல் துறைக்கான இடத்தை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்தால் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
     அதேபோலவே, ஆட்சியர் அலுவலகத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை.
     புறக்காவல் நிலையத்துக்கு அருகில் கட்டப்பட்டு, சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே வைக்கப்பட்டுள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
     இதன் மூலம் ஆட்சியர் அலுவலகத்தின் மறைவான பின் பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதைத் தடுக்க முடியும் என்று ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் கூறுகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai