Enable Javscript for better performance
வாகனச் சோதனையில் முறைகேடு:  அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வாகனச் சோதனையில் முறைகேடு:  அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை

    By  சேலம்,  |   Published on : 27th March 2014 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் வாகனச் சோதனையின் போது முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
     தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
     கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியது:
     தமிழகத்தில் தேர்தல் வாகனச் சோதனை என்ற பெயரில் வணிகர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். வாகனச் சோதனையின்போது எந்தெந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்படாத நிலையில், வணிகர்கள் ஆவணத்துடன் ரூ.3 லட்சம் வைத்திருக்கலாம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
     வணிகர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பணத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றைத் திருப்பி கொடுக்க அலைக்கழிப்பதால் அதற்கு பயந்து கொண்டு வியாபாரத்துக்காகப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
     வியாபாரிகளிடம் உள்ள பணத்தை அதிகாரிகள் பறிப்பது தனி மனித உரிமைகளில் தலையீடு செய்யும் செயல். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும், கட்டுப்பாடுகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
     மேலும், வாகனச் சோதனை என்ற பெயரில் வணிகர்களிடம் உள்ள பணத்தைப் பறித்து அவற்றை தனதாக்கிக் கொள்ளும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை, பணி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     மே 5-ஆம் தேதி வணிகர் தின மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு வணிகர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மாநாடாக இருக்கும். மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்கள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai