Enable Javscript for better performance
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

    By  சேலம்,  |   Published on : 27th March 2014 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
     தமிழகம், புதுவையில் மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரையிலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது.
     சேலத்தில் புதன்கிழமை மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
     அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     சேலம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளை 472 அரசு, நகரவைப் பள்ளிகள், நிதியுதவி, சுயநிதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த 25,051 மாணவர்கள், 23,058 மாணவிகள் உள்பட மொத்தம் 48,109 பேர் 137 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 5 மையங்களில் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது.
     தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் அன்னியர் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது. இவ்விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெளி ஆள்களின் தொந்தரவு இருக்கும் எனக் கருதப்படும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
     தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் தண்டனை பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கும், தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
     மேலும் 150 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள், 30 குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைத்து மையங்களையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகள், காப்பியடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
     ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார், ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன், மிகவும் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்தடைய வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தங்களது இருக்கைகளில் காலை 9 மணிக்கு அமரும் பட்சத்தில் தேர்வுகளை பதற்றம் இன்றி தெளிவாக எழுத இயலும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
     வினாத்தாள்களை 9.15 மணி முதல் 9.25 மணி வரை படித்துப் பார்க்கவும், 9.25 முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் தங்களது பதிவெண், விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும். 9.30 மணி முதல் 12 மணி வரை தேர்வு எழுதும் நேரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
     தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது மாவட்டக் கல்வி அலுவலர் ராமலிங்கம் உடனிருந்தார். முதல் நாளில் நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வு எளிதான வினாக்களுடன் அமைந்திருந்ததாக மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai