Enable Javscript for better performance
சேதமடைந்த இரட்டைக் கோபுரம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் நீர்த் தேக்கத்தில் சேதமடைந்த கிறிஸ்தவ ஆலய கோபுரத்தை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

    மேட்டூர் நீர்தேக்கப்பகுதியில் பண்ணவாடி பரிசல்துறை அருகே இரட்டை கோபுரங்களை கொண்ட கிறிஸ்தவ ஆலயம் நீரில் மூழ்கி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அங்கிருந்த கிராமமக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது அவர்கள் கிறிஸ்தவ ஆலயத்தை அப்படியே விட்டு வெறியேறினர்.

    இந்த இரட்டை கோபுர கிறிஸ்தவ ஆலயம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடிக்கு மேல் உயர்ந்தால் நீரின் மூழ்கி விடும். 80 அடிக்குக் கீழே குறைந்தால் படிப்படியாகத் தெரியத் துவங்கும்.

    இரட்டைக் கோபுரங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பண்ணவாடி பரிசல்துறைக்கு வந்து செல்வார்கள். கடந்த மாதம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடிக்குக் கீழே குறைந்தபோது இரட்டை கோபுரங்கள் தெரியத் துவங்கின.

    திங்கள்கிழமை இரட்டை கோபுரத்தின் மேற்கு பகுதியில் இருந்த ஒரு கோபுரத்தை யாரே சிதைத்து விட்டனர். இது குறித்து தகவல்கள் வெறியானதால் வியாழக்கிழமை மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் அ.வசந்தன், மேட்டூர் வட்டாட்சியர் தமிழ்முல்லை ஆகியோர் விசைப்படகு மூலம் இரட்டை கோபுரம் உள்ள பகுதிக்குச் சென்றனர்.

    அங்கு சேதமடைந்த கோபுரம் எந்தப் பகுதியில் விழுந்துள்ளது என்பது குறித்து சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடந்தது.

    ஆய்வுக்கு பின் மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன் கூறியது:

    மேட்டூர் நீர்த் தேக்கத்தில் இரட்டைக் கோபுரங்களில் ஓன்று சேதமடைந்துள்ளது. இது முழுமையாகச் சாய்ந்துள்ளது. நீர் மட்டம் 71 அடியாக இருப்பதால் முழு விவரம் தெரியவில்லை. நீர் குறைந்த பிறகு கோபுரம் எவ்வாறு சேதம் அடைந்தது என்பது குறித்து முழு விவரம் தெரியவுரும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai