Enable Javscript for better performance
சேலம் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை தொடக்கம்: 8 மாவட்ட மக்கள் பயன்பெறுவர்  - Dinamani

சுடச்சுட

    

    சேலம் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை தொடக்கம்: 8 மாவட்ட மக்கள் பயன்பெறுவர்  

    By  சேலம்,  |   Published on : 28th January 2015 02:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையில், ரத்தக் குழாயில் அடைப்பைச் சரி செய்து ஸ்பிரிங் (ஸ்டென்ட்) வைக்கும் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சென்னை, மதுரையை அடுத்து சேலத்தில் உள்ள சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையில்தான் இந்தச் சிகிச்சை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
     எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சேலத்தில் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்) கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூ.100 கோடி, மாநில அரசின் ரூ.39.31 கோடி என மொத்தம் ரூ.139.31 கோடியில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
     சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
     உணவுப் பழக்கம், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இருதயக் கோளாறு பிரச்னைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இருதயக் கோளாறு தொடர்பாக சேலம் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆஞ்ஜியோகிராம் புளூரோஸ்கோப்பி மானிட்டர்கள் மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
     இந்த மருத்துவமனையில் ஆஞ்ஜியோ கிராம் சிகிச்சை மாதந்தோறும் 100 பேருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆண்டுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
     ஒன்றுக்கு மேற்பட்ட ரத்தக் குழாய் அடைப்புகளால் பாதிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்கு, ரத்தக் குழாய் அடைப்பை மட்டுமே கண்டறிந்து சொல்ல முடிந்தது. அதேபோல, ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்வதற்கான ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை இங்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனர்.
     இந்த மருத்துவமனைக்கு மாதம்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருதயக் கோளாறு தொடர்பாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல, ஆண்டுக்கு சுமார்
     1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுச் செல்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
     தற்போது, நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டு, ரத்தக் குழாய்க்குள் இருக்கும்
     அடைப்பை பலூன் ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்ற முறையின் மூலம் அடைப்பை நீக்கி ஸ்பிரிங் (ஸ்டென்ட்) வைத்து சிகிச்சை அளிப்பதற்காக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
     இதன்படி, தற்போது சேலம் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ஆஞ்ஜியோ பிளாஸ்டி கிசிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலத்தைச் சுற்றியுள்ள 8 மாவட்ட மக்கள் பயன்பெறுவர். இனிமேல் இந்த சிகிச்சைக்காக நோயாளிகள் மதுரை, சென்னைக்குச் செல்ல வேண்டியதில்லை. இங்கேயே தங்கி ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை பெறலாம்.
     இதுதொடர்பாக சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை டீன் மோகன் கூறியது:
     சேலம் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையின் இருதய மருத்துவத் துறை மூலம் ஆஞ்ஜியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் தற்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai